Monday, April 20, 2015

கபிலர் அகவல்...


நான்முகன் படைத்த நானாவகையுலகில்
ஆன்றசிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்
ஆண்முதிதோ பெண்முதிதோ அன்றியலிமுதிதோ
நாண்முதிதோ கோண்முதிதோ நல்வினைமுதிதோ தீவினைமுதிதோ
செல்வஞ்சிறப்போ கல்விசிறப்போ அல்லதுலகில் அறிவுசிறப்போ
தொல்லைமாஞாலந தோற்றமோ படைப்போ
எல்லாப்பிறப்பும் இயற்கையோ செயற்கையோ 
காலத்தாற்சாவரோ பொய்ச்சாவு சாவாரோ 
நஞ்சுறுதீவினை துஞ்சுமோ துஞ்சாதோ 
துஞ்சும்போதந்தப் பஞ்சேந்திரியம் 
எஞ்செயாநிற்குமோ எவ்விடத்தேகுமோ 

ஆற்றலுடையீர் அருந்தவம் புரிந்தால் 
வேற்றுடம்பாகுமோ தமதுடம்பாகுமோ 
உண்டியையுண்குவது  உடலோவுயிரோ 
கண்டின்புறுவது கண்ணொகருத்தோ 
நாக்கடிப்பாக வாய்ப்பறையறைந்து 
சாற்றக்கேண்மின் சாற்றக்கேண்மின்

மனிதர்க்குவயது நூறல்லதில்லை 
ஐம்பதிரவில் அகலுந்துயிலினால் 
ஒட்டியவிளமையால் ஓரைந்துநீங்கும் 
ஆக்கையிளமையில் ஐம்மூன்று நீங்கும் 
எழுபதும்போகநீக்கிருப்பது முப்பதே 
                                      (அவற்றுள்)
இன்புறுநாளுஞ் சிலவேயதாஅன்று 
துன்புருநாளுஞ் சிலவேயாதலால் 
பெருக்காறொத்ததுசெல்வம் பெருக்காற்றிடிகரை
யொத்ததிளமை இடிகரைவாழ்மரமொத்ததுவாழ்நாள் 

ஆதலால் ஒன்றே செய்யவும் வேண்டும் 
அவ்வொன்றும் நன்றே செய்யவும் வேண்டும் 
அந்நன்றும் இன்றே செய்யவும் வேண்டும் 
அவ்வின்றும் இன்னே செய்யவும் வேண்டும் 
அவ்வின்னும்  நாளைநாளைஎன்பீராகில்
நாளைநம்முடைமுறைநாள்  ஆவதுமறியீர்
நமனுடைமுறைநாள் ஆவதுமறியீர்
எப்போதாயினுங்  கூற்றுவன்வருவான்
அப்போதந்தக் கூற்றுவன்றன்னைப்
போற்றவும் போகான் பொருடரப்போகான்
சாற்றவும்போகான் தமரொடும்போகான்
நல்லாரென்னான் நல்குரவறியான்
தீயாரென்னான் செல்வரென்றுன்னான்
தரியானொருகணந் தறுகணாளன்
உயிர்கொடுபோவான்  உடல்கொடுபோகான்

ஏதுக்கழுவீர்  ஏழைமாந்தர்காள்
உயிரினையிழந்தோ உடலினையிழந்தோ
உயிரிழந்தழுதுமென்றோதுவீராகில்
உயிரினையன்றுங்காணீர்  இன்றுங்காணீர்
உடலினையன்றுங்கண்டீர் இன்றுங்கண்டீர்
உயிரினையிழந்த உடலதுதன்னைக்
களவுகொண்ட கள்வனைப்போலக்
காலுமார்த்துக் கையுமார்த்துக்
கூறைகளைந்து  கோவணங்கொளுவி
ஈமத்தீயை  எரியெழமூட்டிப்
பொடிபடச்சுட்டுப்  புனலிடைமூழ்கிப்
போய்த்தமரோடும்  புந்தினைந்தழுவது
சலமெனப்படுமோ சதுரெனப்படுமோ

பார்ப்பனமாந்தர்காள்  பகவர்வதுகேண்மின்
இறந்தவராயுமை  இல்லிடையிருத்திப்
பாவனைமந்திரம்  பலபடவுரைத்தே
உமக்கவர்புத்திரர் ஊட்டினபோது
அடுபசியாற்குலைந்தாங்கவர்மீண்டு
கையேந்திநிற்பது  கண்டதார்புகலீர்
அருந்தியவுண்டியால் ஆர்பசிகழிந்தது
ஒட்டியர்மிலேச்சர்  ஊணர்சிங்களர்
இட்டிடைச்சோனகர்  யவனர்சீனத்தர்
பற்பலநாட்டிலும் பார்ப்பாரிலையால்
முற்படைப்பதனில் வேறாகியமுறமைபோல்
நால்வகைச்சாதியிந்நாட்டில்நீர்நாட்டினீர்
மேல்வகைகீழ்வகை  விளங்குவதொழுக்கால்
பெற்றமுமெருமையும் பிறப்பினில்வேறே
அவ்விருசாதியில்  ஆண்பெண்மாறிக்
கலந்துகருப்பெறல்  கண்டதுண்டோசொலும்
ஒருவகைச்சாதியா  மக்கட்பிறப்பிலீர்
இருவகையாகநீர்  இயம்பியகுலத்துள்
ஆண்பெண்மாறி  அணைதலுமணைந்தபின்
கருப்பொறையுயிர்ப்பதுங்காண்கின்றிலீரோ
எந்நிலத்தெந்தவித்திடப்படுகின்றதோ
அந்நிலத்தந்தவித்தங்குரித்திடுமலால்
மாறிவேறாகும் வழக்கமொன்றிலையே
பூசுரர்ப்புணர்ந்து  புலைச்சியரீன்ற
புத்திரராயினோர் பூசுரரல்லரோ
பெற்றமுமெருமையும் பேதமாய்த்தோன்றல்போல்
மாந்தரிற்பேதமாம்   வடிவெவர்கண்டுளார்
வாழ்நாளுறுப்புமெய் வண்ணமோடறிவினில்
வேற்றுமையாவதும்  வெளிப்படலின்றே
தென்றிசைப்புலையன்  வடதிசைக்கேகில்
பழுதறவோதிப்  பார்ப்பானாவான்
வடதிசைப்பார்ப்பான் தென்றிசைக்கேகின்
நடையதுகோணிப்  புலையனாவான்
                          (அதுநிற்க) 
சேற்றிற்பிறந்த  செங்கழுநீர்போலப்பிரமற்குக்
கூத்திவயிற்றிற்  பிறந்தவசிட்டரும்
வசிட்டருக்குச்சண்டாளி  வயற்றிற்பிறந்தசத்தியரும்
சத்தியர்க்குப்புலைச்சிதோள் சேர்ந்துபிறந்தபராசரரும்
பராசரருக்குமீன்வாணிச்சி  வயிற்றிற்பிறந்தவியாசரும்
                          (ஆகிய இந்நால்வரும்)
வேதங்களோதி மேன்மைப்பட்டு
மாதவராகி வயங்கினரன்றோ
அருந்தவமாமுனியாம்பகவற்கூழ்
இருந்தவாறிணைமுலை ஏந்திழைமடவரல்
ஆதிவயற்றினில்அன்றவதரித்த
கான்முளையாகிய கபிலனும்யானே
என்னுடன்பிறந்தவர் எத்தனைபேரெனில்
ஆண்பான்மூவர்  பெண்பானால்லர்
யாம்வளர்திறஞ்சிறிதியம்புவன்கேண்மின்
ஊற்றுக்காடெனும் ஊர்தனிற்றங்கியே
வண்ணாரகந்தனில்  உப்பைவளர்ந்தனள்
காவிரிப்பூம்பட்டினத்திற்கள்விலைஞர்சேரியில்
சான்றாரகந்தனில்  உறுவைவளர்ந்தனள்
நரப்புக்கருவியோர் நண்ணிடுஞ்சேரியில்
பாணரகந்தனில் ஒளவைவளர்ந்தனள்
குறவர்கோமான் கொய்தினைப்புனஞ்சூழ்
வண்மலைச்சாரலில் வள்ளிவளர்ந்தனள்
தொண்டைமண்டலத்தில் வண்டமிழ்மயிலையில்
நீளாண்மைக்கொளும் வேளாண்மரபுயர்
துள்ளுவரிடத்தில் வள்ளுவர்வளர்ந்தனர்
அரும்பார்சோலைச்சுரும்பார்வஞ்சி
அதிகமானில்லிடை அதிகமான்வளர்ந்தனன்
பாரூர்நீர்நாட்டாரூர்தன்னில்
அந்தணர்வளர்க்க  யானும்வளர்ந்தேன்
                          (ஆதலால்)
மாரிதான்சிலரை வரைந்துபெய்யுமோ
காற்றுஞ்சிலரை  நீக்கிவீசுமோ
மானிலஞ்சுமக்க மாட்டேனென்னுமோ
கதிரோன்சிலரைக்காயேனென்னுமோ
நீணான்குசாதிக் குணவுநாட்டிலுங்
கீணான்குசாதிக் குணவுகாட்டிலுமோ
திருவும்வறுமையுஞ்  செய்தவப்பேறுஞ்
சாவதும்வேறிலை  தரணியோர்க்கே
குலமுமொன்றே குடியுமொன்றே
இறப்புமொன்றே பிறப்புமொன்றே
வழிபடுதெய்வமும்  ஒன்றேயாதலால்
முன்னோருரைத்த மொழிதவறாமல்
எந்நாளாயினும் இரப்பவர்க்கிட்டுப்
புலையுங்கொலையுங்களவுந்தவிர்ந்து
நிலைபெறவறத்தில்  நிற்பதையறிந்து
ஆணும்பெண்ணுமல்லதையுணர்ந்து
பேணியுரைப்பது பிழையெனப்படாது
 சிறப்புஞ்சீலமுஞ்செய்தவமல்லது
பிறப்புநலந்தருமோ பேதையந்தணரே.

                                    கபிலர் அகவல்.
                                                முற்றிற்று.

No comments:

Post a Comment