Tuesday, April 28, 2015

அரிச்சந்திர புராணம்

பெரும்புகழ் பெறும்படி அருந்துயர் கெடும்படி
   பிர்யம்பல வரும்ப டிஉளம்
விரும்பிய தனம்பெற மிகும்பெறு பதம்பெற
   விளங்கிய தவம்செ யநெடும்
கரும்பவல் பெரும்பய றருங்கனி ரசங்கொடு
   கவர்ந்ததென் உவந்த ருள்புரிந்
திருங்கரி முகன்சிறு சதங்கையொ டுகிண்கிணி
   இலங்கிய பதம்பெ றுவனே.


பரிதி தன்மர பில்வரு பார்த்திபன்
விரித ரும்புகழ் மேவரிச் சந்திரன்
சரித மன்னுந் தமிழ்க்குத் துணைசெயக்
கரிமு கன்பதம் கைதொழு தேத்துவாம்.  


சீர்கொண்ட செழுங்கமலத் திசைமுகனும் நெடுமாலும்
   சிவனும் என்னப்
பேர்கொண்ட மூவுருவும் ஈருருவும் ஓருருவாய்ப்
   பிறங்கும் தொல்லை
நீர்கொண்ட அண்டத்தும் தாவரத்தும் சங்கமத்தும்
   நிறைந்து நின்றோன்
தார்கொண்ட தாளிணைகள் தழைகொண்ட அன்பினொடு
   தலைமேற் கொள்வாம்.


புகலரிய சதுமறையாய் மறைப்பொருளாய்உபநிடத்தாய்ப்
   பூதம் ஐந்தாய்
அகிலமுமாய் மன்னுயிராய் அணுவிலணு வாய்அவற்றின்
   அகமாய் மேலாய்ப்
பகல்இரவென் றறியாத பராபரமாய் அறுசமயப்
   பகுதி ஆகிச்
சகலமுமாய் நிட்களமாய் நின்றோன்தன் செழுங்கமலச்
   சரண்புக் கேமால்.


ஆதியாய் அண்டபகி ரண்டத்தும் அப்புறத்தும்
   அடங்கா துற்ற
நீதியாய் மணியொளியும் பாற்சுவையும் எனஅனைத்து
   நிறைந்து நின்றும்
பாதியாய் ஒன்றாகி அருவாகி உருவாகிப்
   பரந்து மல்கும்
சோதியான் முடிசூட்டத் தனதுதிரு வடிசூட்டத்
   துணிந்த தூயோன்.


கனத்தாள்வெங் கயமுகனும் கந்தனும்சம் பந்தனும்பா
   லுண்ட கும்பத்
தனத்தாளே யறம்வளர்த்த கரத்தாளே திரிபுரங்கள்
   தழலாய் வேவச்
சினத்தாளே சிறியோர்கள் செய்தபிழை பொறுத்திரக்கஞ்
   செய்யுஞ் செய்ய
மனத்தாளே நின்கமல மலர்த்தாளே யென்றலைமேல்
   வைத்தாள் வாயே.


வையாம்பன் முகத்தானை மறலியையோ டத்துரந்து
   வாழ்வ தென்றும்
மெய்யாம்பன் முகத்தாலும் வேதத்து மாகமத்தும்
   விரித்த தொன்றே
மொய்யாம்பன் முகத்தானைப் பொடியாகப் பொருதுவினை
   முடித்து நீண்ட
கையாம்பன் முகத்தானைக் காலையினு மாலையினுங்
   கருது வோர்க்கே.


பெருமையிலும் கதிமையிலு முதுமையிலு முகிலெனவே
   பிறங்கு மேனிக்
கருமையிலுங் கடுந்தறுகட் செம்மையிலும் வெம்மையிலுங்
   கலங்கேன் காலா
எருமையிலும் வெள்ளாட்டுப் பால்போது மெனப்பிறரை
   யெண்ணே னன்பால்
வருமையிலும் பொருமையிலும் வரதன்மகன்குகனுமென்றன்    மனத்தி லுண்டே.


அந்தரியா மளைஅமலை ஆல காலி
   அம்பிகைமா தரிசௌரி ஆளி யூர்தி
வந்தரிநான் முகன்வணங்கு மலர்த்தாட் சூரி
   வைரவிதா ருகவைரி மதங்கி நீல
கந்தரியோ கினிசூலி நீலி நாக
   கங்கணிசங் கரிவிமலை காளி வால
சுந்தரிசா முண்டிதிரி சூலி கோலத்
   துணைஅடிஎன் முடிமீது சூடி னேனே.


மருப்பவள வாக்குவிந்து திரண்டு முத்து
   வடம்அணிந்து குடம்எனவே வயங்கிச் செம்பொற்
பொருப்பவள வாவளர்ந்து ததும்பி விம்மிப்
   புடைபரந்த களபநறும் புளகக் கொங்கைத்
திருப்பவள வாயாளைத் தேனை மானைச்
   செழும்படிக நிறத்தாளைத் திகழ்வெண் கஞ்சத்
திருப்பவளை உலகேழும் ஈன்ற தாயை
   எனதிதயக் கமலத்தே இருத்தி னேனே.


நீர்கொள்வார் பாலோடு நேர்உற்றால் பதர்கொள்வார்
   நெல்லோ டுற்றால்
நார்கொள்வார் பூவுற்றால் வேர்கொள்வார் அதிற்சிறிது
   நறையுண் டாயின்

சீர்கொள்வார் புன்சொல்லும் செஞ்சொல்லும் சேர்ந்தொன்றிற்    சேரப் புன்சொல்
ஆர்கொள்வார் என்பதுசற் றறியாமற் சிறியேன்நா
   வசைக்கின் றேனே.





No comments:

Post a Comment